Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு.. கீழ்த்தரமான செயல் என விமர்சனம்..!

Advertiesment
nayanthara

Mahendran

, சனி, 16 நவம்பர் 2024 (13:24 IST)
உங்கள் கீழ்த்தரமான செயல் உங்கள் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது," என தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:
 
"திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த திறந்த கடிதத்தை எழுதுகிறேன். திரு கஸ்தூரி ராஜாவின் ஆதரவில், உங்கள் அண்ணன் திரு கே. செல்வராகவனின் இயக்கத்துடன் முன்னணி நடிகராக உயர்ந்த நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த பின்னணியும் இல்லாமல், சவாலான சினிமா உலகில் போராடி, நேர்மையான உழைப்பின் மூலம் இன்று நான் பெற்ற இடத்தை அடைந்தேன். என் பயணத்தைப் புரிந்து, என்னை பெருமையாக பார்க்கும் ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாக அறிந்துள்ளனர்.
 
'நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் பாடல்களும் உணர்ச்சி நிறைந்த வரிகளும் இன்றும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. ஆனால், என் திருமண ஆவணப்படத்தில் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதால் எனக்கு ஏற்பட்ட மனவேதனை உங்களுக்கு புரிந்திருக்கும். எந்த சட்டப் பிரச்சினையோ அல்லது வணிக ரீதியான காரணத்தாலோ தடையில்லாமல் இருந்திருந்தால் அதைப் பொருத்திருக்கலாம். ஆனால், தனிப்பட்ட வேறுபாடுகள் காரணமாகவே தடைவிதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
 
சமீபத்தில் வெளியான டிரைலரில் உள்ள மூன்று விநாடி காட்சிக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சி அளித்தது. அதுமட்டுமின்றி, ஒரு தனிப்பட்ட காட்சிக்காக பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பது எனக்குப் பேரதிர்ச்சியாயிற்று. இத்தகைய செயல்கள் உங்கள் உண்மையான முகத்தை வெளிக்காட்டுகின்றன. மேடைகளில் நீங்கள் பேசுவது போல வாழ்க்கையிலும் நடக்க முடியாது என்பதையும் நாங்கள் நன்றாகவே அறிவோம்.
 
என் சினிமா பயணத்தின் இனிய நினைவுகளைச் சொல்லும் பல காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கான அனுமதி கேட்டபோது பல தயாரிப்பாளர்கள் பேரன்புடன் ஒப்புதல் அளித்தனர். அவர்கள் மனிதத்தன்மையுடன் நடந்துகொண்டனர். அதனால் அவர்கள்தான் காலத்தை கடந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
 
உங்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் சட்ட ரீதியாக போராட தயாராக இருக்கிறோம். 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு உரிமைகள் பற்றிய விஷயங்களை நீதிமன்றத்தில் விளக்குங்கள். ஆனால் கடவுளின் முன்பில் நீங்கள் விளக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.
 
'நானும் ரௌடிதான்' வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், உங்கள் அவமானகரமான செயல்களை மறைக்கும் போலி முகமூடி அணிந்து சுற்றித்திரிய முடியாது. ஆனால் தயாரிப்பாளராக எனக்கு பெரும் வெற்றி அளித்த, மக்கள் இன்றும் கொண்டாடும் அந்தப் படத்துக்கு நீங்கள் கூறிய கடுமையான வார்த்தைகளை மறக்க முடியாது. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய காயம் என்றென்றும் ஆறாது. அந்த படத்தின் வெற்றியால் உங்களுக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பை சினிமா நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.
 
மேலும், சினிமா விழாக்களில் (Filmfare 2016) நீங்கள் காட்டிய அதிருப்தி எந்த சாதாரண பார்வையாளருக்கும் தெளிவாகத் தெரிந்தது. எந்தத் துறையிலும் வணிக போட்டிகள் தவிர்க்க முடியாதவை என்பதை உணர்ந்தாலும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக் கூடாது. அநாகரிகமான செயல்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், நீங்கள் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட.
 
கடந்த காலத்தில் உங்களுடன் பயணித்தவர்கள் வெற்றிபெற்றால், எந்த கோபமும் இல்லாமல், அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தக் கடிதத்தின் மூலம் வேண்டுகிறேன். உலகம் எல்லோருக்கும் சமமாக இருக்கிறது. கடின உழைப்பின், கடவுளின் அருள், மக்களின் பேரன்பு காரணமாக வெற்றி பெறும் ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், அது உங்களை பாதிக்கக் கூடாது. அடுத்த இசை வெளியீட்டு விழாவில் இதுபோன்ற விவகாரங்கள் நிகழவில்லையென பிரார்த்திக்கிறேன்.
 
இந்த நேரத்தில், ஜெர்மன் மொழியின் "Schadenfreude" எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அதன் பொருளை புரிந்து, யாருக்கும் இனி அப்படி செய்யாமல் இருப்பதை உறுதியாக நினைத்துக்கொள்ளுங்கள்.
 
"மகிழ்வித்து மகிழ்" என்பதே உண்மையான சந்தோஷம். வாழ்க்கை கொண்டாட்டங்களால் நிறைந்து, அனைவரும் புன்னகையோடு கடக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். இதை மையமாக வைத்து தான் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்தால், உங்கள் எண்ணங்கள் நேர்மறையாக மாறுவது நிச்சயம்.
 
நீங்கள் கூறும் "Spread Love" என்பதை வெற்று வார்த்தைகளாக மட்டுமல்லாமல், வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என இனி நானும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!