பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக்கி தனது அசுரத்தனமான நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர். ஒவ்வொரு படத்துக்கும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர் நவாசுதீன். தமிழில் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
ஆனால் அந்த படத்தில் தன்னுடைய நடிப்பு தனக்கே பிடிக்கவில்லை என நவாசுதீன் சித்திக் சில மாதங்களுக்கு முன்னர் அளித்த ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அதில் “நான் அந்த படத்தில் நடித்த பின்னர் மிகவும் வருத்தமடைந்தேன். ஏனென்றால் நான் அந்த படத்தில் என்ன செய்கிறேன் என்பதே எனக்கு தெரியவில்லை. நான் வெறுமனே வாயசைத்துவிட்டு வந்துவிட்டேன். நான் ஒன்றுமே செய்யாத விஷயத்துக்காக பணம் பெற்றுக்கொண்டதாக உணர்ந்தேன். நான் அவர்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கிவிட்டேன். அங்கு நடந்த விஷயங்கள் பல எனக்கு புரியவில்லை” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது வேறொரு பேட்டியில் அவர் இதே கருத்தைப் பேசியுள்ளார். அதில் “நான் ராமன் ராகவ் போன்ற படங்களில் நடிக்கும் போது என்னுடைய ஆன்மா என் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும்போது என்னுடைய கட்டுப்பாட்டில் எதுவும் இருக்காது. யாராவது ஒருவர் என்னுடைய கதாபாத்திரம் பற்றி விளக்க சொல்லி வேண்டிவரும். ஆனாலும் நல்ல சம்பளம் கிடைப்பதால் அந்த படங்களில் நடிக்கிறேன். இருந்தால் என் மனதில் ஒரு குற்றவுணர்வு இருக்கும். அதற்கு சரியான வார்த்தை என்றால் அது cheating என்றுதான் சொல்லவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.