இந்தி சினிமாவின் பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக்கி தனது அசுரத்தனமான நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர். ஒவ்வொரு படத்துக்கும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர் நவாசுதீன். தமிழில் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்தான். இந்நிலையில் அவர் தற்போது தான் பணியாற்றும் இந்தி சினிமா குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். அதில் “பாலிவுட் சினிமாவில் உண்மைத்தன்மையும் படைப்பாற்றலும் இல்லை. தென்னிந்திய சினிமாவைக் காப்பியடித்து படங்களை உருவாக்குகிறார்கள்.
ஒரு படம் வெற்றி பெற்றால், அதை பார்முலாவாக்கி அடுத்தடுத்து அதன் பாகங்களை உருவாக்குகிறார்கள். நிதி திவால் என்று சொல்வது போல இது படைப்புத்திறன் திவால். இது போன்ற ஒரு துறையில் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? நல்ல நடிகர்களூம், இயக்குனர்களும் அனுராக் காஷ்யப் போல விலகத் தொடங்குவார்கள்” எனக் கூறியுள்ளார்.