காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் மக்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டதால் தமிழகமே பரபரப்பில் உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகம் கொதித்தெழுந்துள்ள நிலையில் நடிகர் சங்கமும் தற்போது ஏப்ரல் 8ஆம் தேதி போராட்டம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கம் திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி ஞாயிறு அன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சென்னையில் கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூட வலியுறுத்தியும் மற்றும் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.