ஸ்டண்ட் துணை நடிகர்களில் ஒருவராக இருந்த மொட்டை ராஜேந்திரனை நடிகராக மாற்றிய பெருமை இயக்குனர் பாலாவை சேரும். 'நான் கடவுள்' படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது. இன்று அஜித், விஜய் படங்கள் உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 'எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா' என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரன் தயாரிப்பாளராக நடிக்கின்றார். ஒரு படத்தை உண்மையில் தன்னால் தயாரிக்கத்தான் முடியவில்லை, அட்லீஸ்ட், படத்திலாவது தயாரிப்பாளராக நடிப்போம் என்று அவர் கூறியுள்ளார்
அறிமுக இயக்குனர் கெவின் இயக்கத்தில் அறிமுக நாயகன் அகில் நாயகனாக நடிக்கும் 'எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா' என்ற படத்தில் 'சதுரங்கவேட்டை' நடிகை இஷாரா நாயர், ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகிய நான்கு பேர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
இந்த படம் குறித்து இயக்குனர் கெவின் கூறியபோது, 'தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கான பேர் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்து வருகிறார்கள் அப்படி வருகிறவர்களில் 100 பேராவது சினிமா கனவுகளுடன் வருகிறார்கள் அப்படி சினிமாவிற்காக வந்து வாய்ப்பு கிடைக்காமல் ஊருக்கே திரும்பிச் செல்லும் கதாப்பாத்திரத்தில் நாயகன் அகில் நடிக்கின்றார். அதே ஊரில் பண்ணையாராக இருக்கும் 'நான் கடவுள்' ராஜேந்திரன் அவரிடம் நடந்ததை சொல்கிறான் சஞ்சய். அவனது திறமையையும், அவனது வருத்தத்தையும் புரிந்து கொண்ட ராஜேந்திரன் நானே உன்னை வைத்து படம் தயாரிக்கிறேன் என்று தனது சொத்துக்களை விற்று படம் தயாரிக்கிறார். அந்த படம் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை' என்று கூறினார்.