கலை துறைக்காக மத்திய அரசு வழங்கும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு அவ்விருது பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. விருதைப் பெற்றுக் கொண்டு பேசும்போது அவர் பாலிவுட்டில் இருக்கும் நிற பாகுபாடு குறித்து பேசியுள்ளார்.
அதில் “எனக்கு எதுவுமே எளிதாகக் கிடைக்கவில்லை. கஷ்டப்பட்டுதான் நான் அனைத்தையும் பெற்றேன். நான் ஆரம்பத்தில் சில தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப் பட்டேன். கருப்பு நிறம் கொண்டவர்களால் பாலிவுட்டில் நிலைக்க முடியாது என்றார்கள். அப்போதெல்லாம் நான் கடவுளிடம் என்னுடைய நிறத்தை மாற்றச் சொல்லி வேண்டுவேன். ஆனால் அது நடக்காது என்று தெரிந்ததும் நான் நடனத்தில் கவனத்தை செலுத்தினேன். அப்படிதான் நான் கவர்ச்சியான பெங்காலி பாபுவாக மாறினேன்” எனக் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மிதுன் சக்ரவர்த்தி ஹிந்தி, பெங்காலி உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர். 80களில் அவர் நடித்த மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பல படங்கள், அவரது நடிப்பு மற்றும் நடனத்திற்காகவே வெற்றிப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. டிஸ்கோ நடனம் ஆடுவதில் மிதுன் சக்ரவர்த்தி தனிப்பாணியைக் கொண்டிருந்தார். இவர் நடித்த டிஸ்கோ டான்ஸர் என்ற் படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் படமாக அமைந்தது, ரஷ்யாவில் மட்டும் 94 கோடி ரூபாய் வசூல் செய்தது.