விஜய்யை ஆதரிப்பது பற்றி தன் கருத்தை தெரிவித்துள்ளார் அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரைலர் ரிலீஸ் நடைபெற்ற நிலையில் இப்படம் வரும் 29 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ''மாமன்னன் ஒரு அரசியல் படம். அப்பா பையன் கதையாகும். இயக்குனர் வடிவேலுவின் தீவிர ரசிகர் என்பதால் நான் வடிவேலுவுடன் பேசி இப்படத்தில் நடிக்க ஒப்புதல் பெற்றேன்'' என்று கூறினார்.
மேலும், ''இப்படம் ஜாதி மறுப்பு படம். இப்படம் என் கடைசிப் படம். நான் ஆசைப்பட்டு நடித்த படமும் இதுதான். நடிகர் விஜய் அரசியல் வருகை பற்றி தெளிவாகக் கூறவில்லை. அவர் தன் அரசியல் கொள்கைகளை கூறினால், அதன் பின் விஜய்யை ஆதரிப்பதா?வேண்டாமா என்று முடிவு செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.