Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்குத்தொடர்ச்சிமலை: திரைவிமர்சனம்

மேற்குத்தொடர்ச்சிமலை: திரைவிமர்சனம்
, வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (16:36 IST)
தமிழ் சினிமாவில் எப்போதாவது அத்திபூத்தால்போல் மிக இயல்பாக சினிமாத்தனம் இல்லாமல் ஒரு படம் வரும். அப்படி ஒரு படம் தான் 'மேற்குத்தொடர்ச்சிமலை
 
மேற்குத்தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் இருந்து தினந்தோறும் சுமை கொண்டு செல்லும் தொழிலாளி ரங்கசாமி தான் இந்த படத்தின் ஹீரோ. கூலி ஒருபக்கம் இருந்தாலும் மலைப்பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் இவரது குறிக்கோள். இவ்வாறு வந்த சம்பாத்தியத்தில் சிறுக சிறுக சேமித்து ஒரு சொந்த நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது ரங்கசாமியின் கனவு. ஒருவழியாக பணம் சேர்த்து நிலம் வாங்க முயலும்போது திடீரென நிலத்தின் உரிமையாளரின் உறவினர்கள் தகராறு செய்யவே பத்திரப்பதிவு நின்றுவிடுகிறது. அதன் பின்னர் அம்மாவின் பேச்சை தட்டாமல் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் ரெங்கசாமி, அதே பகுதியை சேர்ந்த ஒரு பாட்டியின் நிலத்தை வாங்க முடிவு செய்கிறார். அந்த நேரத்தில்தான் திடீரென தான் சேர்த்து வைத்த மொத்த பணம் பறிபோகிறது. இருப்பினும் அந்த ஊரில் உள்ள நல்லவர் ஒருவர் ரெங்கசாமிக்கு நிலம் வாங்க உதவி செய்கிறார். 
 
இந்த நிலையில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் ரெங்கசாமியின் வாழ்க்கையில் திடீரென ஏற்படும் திருப்பங்கள், எதிர்பாராமல் ஒரு கொலை குற்றத்தில் சிக்கி சிறைக்கு செல்லுதல், கடைசியில் சொந்த நிலத்திலேயே வேலைபார்க்கும் சோகம் என கதை முடிகிறது
 
ரெங்கசாமியாக நடித்திருக்கும் அந்தோணி, இந்த படத்தில் நடித்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்தார் என்று சொல்வது தான் உண்மையாக இருக்கும். அவருக்கு மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி மற்றும் இந்த படத்தில் உள்ள அனைவரும் நடிப்பு முதல் வசன உச்சரிப்பு வரை எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் மிக இயல்பாக நடித்துள்ளனர்.
 
webdunia
இந்த படத்திற்கு தனது பின்னணி இசை மூலம் உயிர் கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா. மூன்றே பாடல்கள் என்றாலும் மூன்றும் முத்தான பாடல்கள். 
 
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம். மேற்குத்தொடர்ச்சிமலையின் அழகை இதைவிட யாராலும் படம் பிடிக்க முடியாது. 
 
இயக்குனர் லெனின்பாரதியை உலகத்தரமான இயக்குனர் பட்டியலில் தாராளமாக சேர்க்கலாம். கதை சொன்ன நேர்த்தி. படம் பார்ப்பவர்களை திரைக்கு உள்ளே கொண்டு செல்லும் யுக்தி ஆகியவை இயக்குனருக்கு கிடைத்த வெற்றி. நாம் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்கின்றோமா? அல்லது கேரக்டர்களுடன் சேர்ந்து நாமும் மலையேறுகிறோமா? என்று படம் பார்க்கும்போது சந்தேகம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 
 
நகர வாழ்க்கையில் உள்ள மக்களுக்கு இப்படி ஒரு பிரிவு மக்கள் இருக்கின்றார்களா? என்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை பதிவு செய்த இயக்குனருக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டு. மேலும் ஒரு விவசாயி என்னதான் உழைத்து கஷ்டப்பட்டு விவசாயம் செய்தாலும் கடைசி வரை முன்னேற்றம் இல்லாமல் இருப்பதும், விவசாயிக்கு உரம் விற்று விதை விற்றவர்கள் மட்டும் ஒருசில ஆண்டுகளில் பணக்காரர் ஆகும் யதார்த்தத்தையும் இயக்குனர் மிக அழகாக பதிவு செய்துள்ளார். மேலும் கிராம மக்களிடம் உள்ள வெள்ளேந்தியான மனம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம், ஆகியவற்றை மிக இயல்பான வசனங்களின் மூலம் விளக்கியுள்ளார். இயக்குனர்.
 
இந்த படத்தை தயாரித்துள்ளவர் நடிகர் விஜய்சேதுபதி. இப்படி ஒரு அருமையான படத்தை உருவாக்க காரணமாக இருந்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
 
மொத்தத்தில் ஒவ்வொருவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு உலகத்தரமான படம்
ரேட்டிங்: 4/5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது கடினமான விஷயம்!