உலகம் முழுவதும் படத் தயாரிப்பு முறைகள் தற்போது மாறி வருகின்றன. தயாரிப்பாளர் கிடைக்காத அறிமுக இயக்குனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் உதவியால் கிரவுட் பண்டிங் மூலமாக சிறிய பட்ஜெட்டில் படங்களை எடுப்பது தற்போது அதிகமாகியுள்ளது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த கூட்டுத் தயாரிப்பு முறையில் மனிதர்கள் என்ற படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் அதன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் ராம் இந்திரா இயக்கியுள்ள இந்த படம் ஒரே நாள் இரவில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.
படத்துக்கு அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அனிலேஷ் எல் மேத்யூ இசை அமைக்கிறார். ஸ்டூடியோ மூவிங் டர்டிள் மற்றும் கிரிஷ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ், சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்கு தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் பலர் ஆதரவு தெரிவித்து விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் படம் மே 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.