விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா இன்று வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதால் இந்த வெற்றி அவருக்கு மிகவும் முக்கியமானதாக அமையும். படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் அந்த கிளைமேக்ஸ் காட்சிக்காக அதீத டிராமவை கொண்டு செயற்கை தன்மை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மகாராஜா திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் எந்தவொரு தமிழ் திரைப்படமும் படைக்காத சாதனையைப் படைத்துள்ளது. மகாராஜா திரைப்படம் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக் கிழமைக்குள் மட்டும் 199320 டிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டில் எந்தவொரு தமிழ்ப் படமும் படைக்காத சாதனையாக அமைந்துள்ளது.