மோகன்லால் நடித்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான எம்புரான் படம் ரசிகர்களை ஈர்க்க தவறியதால் காலை முதலே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் லூசிஃபர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் என்ற பெயரில் தயாராகி இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் மலையாள சினிமாவில் அதிகமான பட்ஜெட்டில் தயாராகியுள்ளது.
அதனால் பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இந்த படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லூசிஃபர் படத்தில் ஸ்டீபன் நெடும்பள்ளிக்கு இருந்த கெத்து, இந்த படத்தில் ஆபிரஹாம் குரேஷிக்கு இல்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்ட இந்த ட்ரையாலஜியின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ஒரு இயக்குனராக ப்ரித்விராஜ் தொழில்நுட்ப ரீதியான அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்திருந்தாலும், திரைக்கதையில் முரளி கோபி தொய்வான, ஆழமற்ற கதையையும், கதாப்பாத்திரங்களையும் தந்துள்ளார்.
இதனால் ஆபிரஹாம் குரேஷி கதாப்பாத்திரத்தால் மொத்த படத்தையும் தாங்கி பிடிக்க முடியவில்லை. ஆங்காங்கே ஆக்ஷன்களை வைத்து ஈடு செய்ய முயன்ற நிலையில் படத்தின் தொய்வை பார்வையாளர்களால் உணர முடிகிறது. முதல் பாதியை வைத்தே இரண்டாம் பாதியில் நடக்கும் க்ளிஷே பழிவாங்கும் கதையை ஆடியன்ஸ் யூகித்து விடுகின்றனர்.
ஆனால் மோகன்லால் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். இரண்டாம் பாதியில் காட்டுக்குள் நடக்கும் சண்டை காட்சிகள் தியேட்டர் சென்றதற்கு மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.