விக்ரம் படத்தின் வெற்றி தமிழ் சினிமா இதுவரைக் கண்டிராத வெற்றியாக அமைந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூலமாக கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சென்னையில் படத்தின் சக்ஸஸ் மீட் நடந்த நிலையில் அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “படம் வெளியாகி ஹிட்டானதும், கமல் சார் எனக்கு போன் செய்து பேசினார். படம் ஹிட்டாயிடுச்சுன்னு ஓய்வு எடுத்துவிடாதே. ஆஃபிஸூக்கு சென்று அடுத்த பட வேலையை பார் என்று கூறினார். அதைதான் நான் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்கிறேன். அடுத்த படத்தை ஏனோ தானோவென்று எடுக்க மாட்டேன். கூடுதல் பொறுப்புடன் நீங்கள் கொடுத்த கூடுதல் நம்பிக்கையுடனும் எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக விக்ரம் படத்தின் தமிழக விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது “எல்லோரும் படத்தின் வசூல் பற்றி அறிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு விநியோகஸ்தராக நான் இப்போது அறிவிக்கிறேன். தமிழ்நாட்டில் மட்டும் எங்கள் ஷேராகவே 75 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத வசூல். இன்னும் 3 வாரங்களுக்கு திரையரங்குகளில் ஓடும். இப்போதும் வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் பலர் எனக்கு போன் செய்கிறார்கள்.” என்று பேசினார்.