கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் உத்தம வில்லன் . கடந்த 2015ஆம் ஆண்டு இந்த படம் வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. மிகப்பெரிய நஷ்டத்தால் அவர்களால் தொடர்ந்து செயல்பட முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இன்னும் அவர்களால் அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வரமுடியவில்லை.
இந்நிலையில் அந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்குக் கமல்ஹாசன் மீண்டும் ஒரு படம் அந்த நிறுவனத்துக்கு நடித்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை அவர் அந்த படத்தை நடித்துக் கொடுக்கவில்லை. இதுகுறித்து தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய நேர்காணல்களில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கமல்ஹாசன் மேல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது. அதில் உத்தம வில்லன் படத் தோல்வியால் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எங்களுக்கு ஒரு படம் நடித்துத் தருவதாக கமல்ஹாசன் 9 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்பு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆனால் அவர் சொன்னபடி இதுவரை அந்த படத்தில் நடித்துக் கொடுக்கவில்லை. எங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் எங்களை நெருக்குகிறார்கள். அதனால் தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை வேண்டும் எனக் கூறியுள்ளனர்.