தினமும் தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்கள் மட்டும் தான் ஒளிபரப்ப வேண்டும். ஒரு சீரியல் 20 முதல் 30 எபிசோடுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று மெகா சீரியல்களுக்கு கட்டுப்பாடு விதிக்க கேரள மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களை ஆய்வு செய்ததில் சீரியல்களில் தவறான செய்திகள், ஒழுக்க கேடான காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாக தெரிய வந்தது. இதனை அடுத்து மலையாளத்தில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா அரசுக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அந்த பரிந்துரையில் தினமும் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதிகபட்சமாக ஒரு தொடர் 20 முதல் 30 எபிசோடுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும், ஒரு தொலைக்காட்சி ஒரு நாளைக்கு இரண்டு தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப ஆண்டாக வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும், சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும், சீரியல்கள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு தணிக்கை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சீரியல்களினால் இளம் பார்வையாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த பரிந்துரையை செய்துள்ளதாக கேரள மாநில மகளிர் ஆணையம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.