கர்ணன் விவகாரத்தில் தான் ஏதும் பேசவில்லை என சொல்லாமல் சொல்லியுள்ளார் நடிகர் கருணாஸ்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தென் தமிழகத்தின் சாதிய பாகுபாடுகளை வெளிக்காட்டியதாக பாராட்டப்பட்டவர் மாரி செல்வராஜ். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் நெல்லையில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையினர் அமைப்பு நெல்லை மாநகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் 1991 ஆம் ஆண்டில் நடந்த கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும். தென்னகத்தில் அமைதியான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த படம் சாதிய கலவரங்களை தூண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துக்கொண்ட கருணாஸை பேச அழைக்கும் போது, எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் கருணாஸ், கர்ணன் திரைப்படத்தில் கூட பிரச்சனை என குரல் கொடுத்திருப்பதாக கூறி பேச அழைத்தார்.
இதனை கேட்டதும் கருணாஸ், நான் எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதாகவும், ஆனால் யார் யாரோ கொடுக்கும் குரலை என் குரலென்றால் எப்படி என்று கேள்வி எழுப்பினார். எனவே தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையினர் அமைப்பு புகார் அளித்தற்கும் கருணாசுக்கும் சம்மந்தம் இல்லையா என சந்தேகம் எழுந்துள்ளது.