அண்ணனிடம் அடிதான் கிடைக்கும் என கலகலப்பாகப் பேசியுள்ளார் கார்த்தி.
கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சயீஷா ஹீரோயினாக நடித்துள்ளார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு இருவரும் கார்த்தியின் மாமன் மகள்களாக நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இதன் இசை வெளியீட்டு விழா, சத்யம் தியேட்டரில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கார்த்தி, “கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாகத்தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
பட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது.
நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம்.
சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும்” என்று கலகலப்பாகப் பேசினார்.