உலக நாயகன் கமல்ஹாசனுக்கு கே.பாலசந்தர் குருநாதர் என்பதும் அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் தாதா சாகேப் விருது கிடைத்தது என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் கமல்ஹாசனுக்கு இன்னொரு குருவாக, சிறந்த வழிகாட்டியாக இருந்தவர் பிரபல தெலுங்கு பட இயக்குனர் கே.விஸ்வநாத். இவருடைய இயக்கத்தில் கமல்ஹாசன் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். மேலும் கமல்ஹாசனின் 'குருதிப்புனல்', 'உத்தம வில்லன்' உள்பட சில படங்களில் கே.விஸ்வநாத் நடிக்கவும் செய்துள்ளார்.
இந்நிலையில் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இன்று தாதா சாகேப் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த விருதான இந்த விருது விஸ்வநாத் அவர்களுக்கு கிடைத்த செய்தி அறிந்தவுடன் தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரைப்படத்துறையினர்களிடம் இருந்தும் வாழ்த்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த விருது வரும் மே 3ஆம் தேதி டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களால் கே.விஸ்வநாத் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதை ஏற்கனவே சிவாஜி கணேசன், ராஜ்குமார், லதா மங்கேஷ்கர், சத்யஜித்ரே, ஆஷா போன்ஸ்லே உள்பட பலர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.