சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்துக்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த வாரம் 'குமுதம்' வார இதழ் நிறுவனம் 'அயலான்' திரைப்பட வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கே,ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:
''சிக்கல் இல்லாத அயலான், மீளுமா ஊடக தர்மம்?
இந்த வாரம் 'குமுதம்' வார இதழ் நிறுவனம் 'அயலான்' திரைப்பட வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு அந்நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, 'தாங்கள் நீண்டகாலமாக அயலான் திரைப்படத்தின் exclusive செய்திக்காக பின்தொடர்ந்ததாகவும் ஆனால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் 'ஆனந்த விகடன்' நிறுவனத்திற்கு exclusive செய்திகளை கொடுத்ததால் தான் இந்த வார இதழில் அப்படியான செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டதாகவும் கூறுகிறார்கள். இதுவா உங்கள் பத்திரிக்கை நிறுவனத்தின் தர்மம்?
ஒரு திரைப்படத்தின் முக்கிய செய்தியை எதில் ஊடகப்படுத்த வேண்டும் என்ற சுதந்திரமும், உரிமையும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடையாதா? இதற்காக அந்த திரைப்படத்தை பற்றி வதந்தி பரப்புவது ஒருவித வன்முறை ஆகாதா?
இதுபோன்ற கீழ்மையான செயலை இனிமேலும் எந்த திரைக் கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் செய்யாமல் இருக்குமாறு குமுதம் நிறுவனத்தை கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளது.