தமிழ் சினிமாவின் அடையாளமாக உலகமெங்கும் உள்ள தமிழர்களால் தங்கள் வீட்டு உறுப்பினராகக் கொண்டாடப்படுபவர் இளையராஜா. 82 வயதாகும் அவர் இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள நிலையில் இப்போதும் பிஸியான இசையமைப்பாளராக உள்ளார்.
அவருடைய பயோபிக் ஒருபக்கம், தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி வழக்கு சர்ச்சை ஒருபுறம் என இப்போதும் பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில் சென்னை ஐஐடியோடு இணைந்து அவர் இசை ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தாகியுள்ளது.
ஐஐடி மெட்ராஸில் உருவாகவுள்ள மேஸ்ட்ரோ இளையராஜா இசைக் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இளையராஜா “நான் கிராமத்துல இருந்து இசை கற்றுக்கொள்ள சென்னை வந்த போது என் அம்மா 400 ரூபாய் பணம் கொடுத்தார். இசைக் கற்றுக்கொள்ள வந்த நான் இப்போது ஆராய்ச்சி மையத்தில் இசை கற்றுக் கொடுக்கிறேன். நான் பிறந்த் ஊரில் இசைக் கற்றுக் கொடுக்க ஆள் இல்லை. எல்லோரும் நான் ஏதோ சாதித்துவிட்டதாக சொல்கிறார்கள், நான் அப்படி நினைக்கவில்லை. மூச்சுவிடுவது போல எனக்கு இசை இயல்பாக வருகிறது” எனப் பேசியுள்ளார்.