Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது- அர்விந்த்சாமி!

கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது- அர்விந்த்சாமி!

J.Durai

, செவ்வாய், 8 அக்டோபர் 2024 (09:10 IST)
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார். 
 
படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினர்.
 
இந் நிகழ்வு  சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில்  நடைபெற்றது.
 
 
அப்போது நடிகர் அர்விந்த்சாமி பேசும் போது.......
 
நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு நன்றி. இந்த படம் வெளியாகும்போது நான் இங்கே இல்லை. புரமோசன்களை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. நேற்று தான் வந்தேன். இந்த படத்தின் ரிலீஸை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அழகாக செய்து கொடுத்தார். வெளிநாட்டில் இருந்தாலும் கார்த்தி, இயக்குனர் பிரேம்குமார், ராஜசேகர் ஆகியோருடன் தொலைபேசியில் அவ்வப்போது படம் குறித்து பேசிக் கொள்வேன். பத்திரிகையாளர்கள் எனது நடிப்பை பாராட்டியதை விட கார்த்திக்கின் நடிப்பை பாராட்டியதுதான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. இயக்குனர் என்ன விரும்பினாரோ அதை சிறிதும் மாற்றாமல் அந்தக் கதாபாத்திரங்களை அப்படியே வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் முயற்சித்தோம். படப்பிடிப்பில் நடிக்க செல்வதற்கு முன் இந்த கதாபாத்திரம் இப்படித்தான் என மனதில் நினைத்துக் கொண்டு செல்வேன். ஆனால் அங்கே உடன் நடிக்கும் மற்றவர்களின் நடிப்பை பார்த்து அதிலிருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டு நடிப்பேன். நான் மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை. நான் அவ்வளவு படம் எல்லாம் நடிப்பதும் இல்லை. எந்த போட்டியிலும் இல்லை.. உங்களுக்கே தெரியும். செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும். இது போன்ற ஒரு அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம் என்றார்.
 
நடிகர் கார்த்தி பேசும்போது.......
 
இந்த படத்தை புரிந்து கொண்டு இதனை பாராட்டி விதவிதமான வரிகளில் விமர்சனங்களை எழுதிய ஊடகங்களுக்கு மிகப்பெரிய நன்றி. இன்னொரு பக்கம் உலகத்தில் சின்ன சின்ன மூலைகளில் இருந்தும் கூட இந்த படம் ஒவ்வொருவரிடமும் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று எழுத்து பதிவுகளாகவும் மீம்ஸ் ஆகவும் ரீல்ஸ்களாகவும் வெளியிட்டு வரும் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்பு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் குடும்ப உறவுகளை மையப்படுத்தி அவ்வளவு அழகான கதைகளை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு படம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அப்படி ஒரு கதை என்னிடம் வரும்போது அதை எப்படி மிஸ் பண்ணுவேன்.
 
மெட்ராஸ் படம் வெளியான சமயத்தில் பொழுதுபோக்கு படம் பண்ணினாலும் பருத்திவீரன், மெட்ராஸ் போன்ற படங்களையும் பண்ண வேண்டும் என நீங்கள் ( பத்திரிக்கையாளர்கள் ) சொல்லியிருந்தீர்கள்அதை நான் மறக்க மாட்டேன். இந்த படம் எவ்வளவு உரையாடல்களை உருவாக்கி இருக்கிறது. நல்ல கலை படைப்புக்கு முக்கியமான விஷயமே இந்த உரையாடலை ஏற்படுத்துவது தான். விவாதத்தை ஏற்படுத்துவது தான். அப்படி நிறைய விஷயங்களை இந்த படம் பேச வைத்திருக்கிறது. அதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. எல்லா கலையம்சத்தையும் சேர்த்த கலைப்படைப்பு என காட்டிக் கொள்வதற்கு எப்போதாவது சில நல்ல படங்கள் அமையும்.அப்படி ஒரு படமாக தான் இதை பார்க்கிறேன்.
 
30 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாழ்க்கையில் கொஞ்சமாவது கஷ்டத்தை பார்த்தவர்கள் அவர்கள் எல்லோருக்கும் இந்த படம் நிச்சயம் புரியும் என நம்பினேன். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மக்களுக்கு எண்ண ஓட்டம் ஒரு மாதிரியாக இருந்திருக்கும். அதற்கு பிறகு வந்தவர்களின் எண்ண ஓட்டங்கள் வேறு மாதிரி இருக்கும். தொழிலுக்காக சொந்த ஊரை விட்டு வருவது, நம் கலாச்சாரங்களை விட்டுப் போய்விடுவது, நம் சரித்திரத்தை மறந்து விடுவது என நாம் மறந்த, அதே சமயம் நம் மனதில் இப்போதும் ஆழமாக இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் எடுத்து கண் முன் வைத்தது போல் இந்த கதை இருந்தது. இன்று சர்ச்சையான விஷயங்கள் தான் நன்றாக போகிறது என்று சொல்லப்பட்டாலும் முன்பின் தெரியாதவருக்கு ஒருவர் செய்யும் உதவி குறித்த வீடியோ வெளியாகி அதனுடைய வியூஸ் எண்ணிக்கை தான் இங்கே அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இந்த படம் பண்ணினோம்.
 
கோவிந்தராஜின் படத்தொகுப்பில் நிகழ்கால காட்சியையும் கடந்த கால காட்சியையும் எந்தவித நெருடலும் இன்றி அழகாக கோர்த்திருந்ததனர். கோவிந்த் வசந்தாவின் இசையில் ஒரு மாடு கூட தெய்வமாக தெரிந்தது. பழைய சைக்கிளுக்கு அவ்வளவு வேல்யூ இருக்கிறது என்பதை உணர முடிந்தது. நாம் யாருக்கோ தெரியாமல் செய்யும் ஒரு உதவி அவர்களது வாழ்க்கையையே மாற்றும்போது நமக்கு தெரிந்தவர்களுக்கு நாம் உதவி செய்வதில் தவறு என்ன இருக்கிறது ? இன்று ஒவ்வொருவரின் மனசாட்சியாக அவர்களை கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்றால் அதுதான் இசையின் வேல்யூ. எந்த இடத்திலும் சினிமா என்று தெரியாதபடி இருந்தது மகியின் ஒளிப்பதிவு இருந்தது. 
 
நமக்கு எதுவும் வராதவரை எதுவும் பிரச்சினை இல்லை என்று தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம் பின்னால் இருக்கிற ஒரு விஷயம் நமக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்பதை எடுத்து கண் முன்னால் பேசும்போது தான் அதன் சீரியஸ்னஸ் தெரிகிறது. அது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வது எனக்கே ஒரு படிப்பினையாக இருந்தது. அண்ணன் சூர்யா அடிக்கடி என்னிடம் உன்னால் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்க முடியுமோ அப்படி இரு என்று சொல்வார். அப்படி பெருந்தன்மையாக இருந்தால் தான் சில தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும். கோபப்பட்டவர்களிடம் கூட அன்பு காட்ட முடியும்.
 
நாங்கள் சிறுவயதில் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும்போது உறவினர்கள் தங்களது தகுதிக்கு மீறி எங்களை கவனிப்பார்கள். உபசரிப்பார்கள். நாம் சாப்பிடுகிறோமா என கவனித்து பார்ப்பார்கள். சில நேரம் அதை கையில் தொட்டுப் பார்க்காமல் கூட திரும்பி வருவோம். இப்போது அதை நினைத்து பார்த்தால் நம் மீது அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு காட்டிய அவர்களை அங்கீகரிக்கிறோமா? அதை திருப்பிக் கொடுக்கிறோமா என திரும்பத் திரும்ப யோசித்துப் பார்க்கிறேன். மீண்டும் ஊருக்கு சென்றால் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டு வர வேண்டும் என்று தோன்றுகிறது. அது போன்ற உணர்வுகளை நாம் இழந்து விட்டோமா அல்லது மறந்து விட்டோமா என்கிற நிலையில் தான் இந்த படம் அதை திரும்பவும் ஏற்படுத்துகிறது. அப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் அளவிற்கு இந்த படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கேரளாவிலும் அதே அளவிற்கு என வரவேற்பு இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக இந்த படத்தை கொண்டாடுகிறார்கள். தொலைதூரத்தில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு இதன் மதிப்பு அதிகம் தெரிகிறது. இயக்குனர் பிரேம் ஒரு வரலாற்று கதை வைத்திருக்கிறார். அதன் எழுத்து நடையை படித்து முடித்ததும் உரிமையுடன் யார்யா நீ என்று கேட்கிற அளவிற்கு மரியாதை போய் அவரிடம் உரிமை வந்துவிட்டது. அதை எப்போது எழுதி முடிப்பார் என நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 
 
அர்விந்த் சாமியும் நானும் போட்டி போட்டு நடித்ததாக பலர் கூறினார்கள். ஆனால் நாங்கள் இருவரும் உண்மையில் என்ஜாய் பண்ணி நடித்தோம். அதனால் அர்விந்த்சாமி சாருக்கு நன்றி சொல்ல முடியாது. ( சிரிக்கிறார் ) அடிக்கடி அவரை போய் தொல்லை பண்ணிக் கொண்டுதான் இருப்பேன். பிரேம்குமார் எழுதிய கதையில் உள்ள வரிகள் ஏற்படுத்தாத உணர்வை அர்விந்த்சாமி தான் திரையில் கொண்டு வந்தார். அதனால் அவருக்குத்தான் அந்த பாராட்டு சேரும் என்று கூறினார்.
 
இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது.......
 
இந்த படத்தின் வெற்றிக்கு என்னுடன் துணை நின்ற பட குழுவினர் அத்தனை பேருக்கும் நன்றி. நானும் ஒளிப்பதிவாளர் மகேந்திரனும் ஒன்றாகவே படித்தவர்கள். ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள். நடிகர் சிவகுமார் சார் பேசும்போது கூட ஏண்டா ஒண்ணா படிச்சீங்கன்னா கூட ஒரே மாதிரியா இருப்பீங்க என்று நகைச்சுவையாக கேட்பார். 96 படத்தை விட இந்த படத்தில் மகேந்திரனின் வேலைகள் எனக்கு சற்று புரியபடவில்லை. ஆனாலும் படம் வெளியானபோது அதற்கு குவியும் பாராட்டுகளை பார்த்தபோது தான் நான் 8 வருடம் டச் விட்டுப் போனதால் ஒளிப்பதிவில் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
 
ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இவ்வளவு ஒழுங்கு, இவ்வளவு சுதந்திரம் என இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அதற்கு தயாரிப்பாளர் ராஜசேகர் சாருக்கு நன்றி. பொதுவாக நான் ஒருவருடன் அதிகம் சண்டை போட்டால் அவர்களை என் வாழ்க்கையில் இருந்து தூக்கி ஓரமாக வைத்து விடுவேன். அதற்கு பிறகு அவர்களிடம் பேச மாட்டேன். ஆனால் இப்பொழுது நான் அதிகம் சண்டை போட்டது ராஜசேகர் சாருடன் தான். அவரை என்னால் விட முடியவில்லை. மனசு விட மாட்டேன் என்கிறது. 2டி இந்த படத்தை தயாரிக்கவில்லை என்றால் இந்த படம் இந்த அளவிற்கு வந்திருக்குமா, இந்த படத்தை இயக்கி இருப்பேனா என்பது சந்தேகம்தான். அந்த விதத்தில் சூர்யா சார், ஜோதிகா மேம் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. மெய்யழகன் மெய்யழகனாகவே வந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் தான். படத்தின் கண்களாக இருக்கும் கார்த்தி, அர்விந்த்சாமி இருவருக்கும் நன்றி” என்று கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகள் சற்று அதிகரிக்கலாம்!– இன்றைய ராசி பலன்கள்(08.10.2024)!