Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிசயமான காட்சிகளுக்கு சாட்சி - 'ஹனுமான்' படத்தின் டிரைலர்!!

அதிசயமான காட்சிகளுக்கு சாட்சி -  'ஹனுமான்' படத்தின் டிரைலர்!!
, புதன், 20 டிசம்பர் 2023 (11:34 IST)
'ஹனுமான்' திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


நமது அசல் நாயகன் ஹனுமானின் வீரதீரத்தைக் காண்பதற்காக புனிதமாக காத்திருந்தமைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம் இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான 'ஹனுமான்' திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. அகண்ட பாரதத்தின் இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்டு இந்த முன்னோட்டத்தின் முதல் காட்சி- அஞ்சனாத்திரி இடம் பெற்றிருப்பது, நம்மை கற்பனை பிரபஞ்சத்திற்குள் அழைத்துச் செல்கிறது. தண்ணீருக்கடியில் நடக்கும் காட்சியில் கதாநாயகன் ஒரு நட்சத்திரம் போல் ஜொலிக்கும் முத்து ஓட்டின் அருகில் செல்வதை காட்சிப்படுத்துகிறது. 'யதோ தர்ம ததோ ஹனுமா.. யதோ ஹனுமா ததோ ஜெய..' (எங்கே நீதி இருக்கிறதோ.. அங்கே ஹனுமான்... ஹனுமான் எங்கே இருக்கிறாரோ... அங்கே வெற்றி இருக்கிறது)

அஞ்சனாத்ரியின் உண்மையான அழகு ஹனுமான் மலையில் இருக்கிறது. அங்கு ஒரு பெரிய அனுமன் சிலை உள்ளது. அதன் மேலிருந்து தண்ணீர் விழுகிறது. பின்னணியில் ஒலிக்கும் 'ரகு நந்தனா..' எனும் கோஷம் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. கதாநாயகன் சிறுத்தையுடன் ஓடி... மலையை தூக்கி.. அவனது எதிரிகளான பழங்குடியினரைத் தாக்கும் போது.. சூப்பர் ஹீரோவாக வெளிப்படுகிறான்.‌

இதைத்தொடர்ந்து விஞ்ஞானத்தின் உதவியுடன் தனது வல்லரசுகளை கண்டுபிடித்து, அவரை உலகின் மன்னராக மாற்றும் அந்த சக்தியை தேடும் தனது படையை உருவாக்கிய வில்லன் வருகிறார். அவர் வந்தவுடன் எல்லாவற்றையும் அழித்து விடுகிறார். குழந்தைகளைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. கதாநாயகனும் கொடூரமாக தாக்கப்படுகிறான்.

'தர்மத்தின் மீது இருள் சூழ்ந்தால்.. முன்னோர்கள் மீண்டும் எழுவார்கள்...' எனும் முதுமொழிக்கு ஏற்ப இறுதியில் ஹனுமானின் தரிசனம் கிடைக்கிறது. டீசரில் ஹனுமான் ஐஸ் கட்டியில் ஸ்ரீராமிடம் பிரார்த்தனை செய்வது காண்பிக்கப்பட்டது. தற்போதைய முன்னோட்டத்தில் அவர் அதை உடைத்து வெளியே வருகிறார். அவர் தர்மத்தை பாதுகாக்க இருக்கிறார் என்பதை சூசகமாக குறிக்கிறது. இது அடுத்தக்கட்ட நிலை குறித்த எதிர்பார்ப்பையும், மெய் சிலிர்ப்பையும் உண்டாக்குகிறது.

இதில் இடம்பெறும் ஒரு காட்சி- அதிசயத்தை அளித்தாலும் 208 வினாடிகள் கொண்ட அந்த காணொளி.. ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இதன் மூலம் இயக்குநர் பிரசாத் வர்மாவின் கடும் முயற்சி... ஒவ்வொரு பிரேமிலும் காண முடிகிறது. ஒரு அற்புதமான பிரபஞ்சத்தை உருவாக்கி, கதாபாத்திரங்களுடன் நம்மையும் பயணிக்க வைக்கிறார். அத்துடன் இந்த பிரபஞ்சத்தில் உள்ள நல்லனவற்றையும்.. கெட்டனவற்றையும் முன்வைக்கும் அவருடைய பாணி வியக்க வைக்கிறது. அறிவியலுக்கும், ஆன்மீகத்துக்கும் இடையிலான தலைசிறந்த கதை சொல்லும் சமநிலை.. படைப்பாளி பிரசாத் வர்மாவின் புத்திசாலித்தனத்தை எடுத்துரைக்கிறது.

தேஜா சஜ்ஜா வல்லரசுகளைப் பெற்று, உலகை காப்பாற்றும் பணியை ஏற்கும் பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.. அவரது தோற்றமும், திரை தோன்றலும், உடல் மொழியும்.. தேஜா சஜ்ஜா கதாபாத்திரத்தை உணர்ந்து கதாபாத்திரமாகவே மாறி இருப்பதைக் காட்டுகிறது. அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வினய் ராய் தனது வில்லத்தனமான செயல்களால் நம்மை பயமுறுத்துகிறார். சமுத்திரக்கனி ஒரு சாதுவாக தனது இருப்பை உணர வைக்கிறார். தேஜாவின் தங்கையாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் கெட்டப் சீனு மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும் இந்த முன்னோட்டத்தில் நடிகை அமிர்தா ஐயருக்கும், நாயகன் தேஜா சஜ்ஜாவிற்கும் இடையான காதல் காட்சிகள் இடம் பெறவில்லை.

தாசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவு- ஒவ்வொரு ஃபிரேமிலும் அவர் உயிரை கொடுத்து உழைத்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. அஞ்சனாத்ரியின் அழகை சிறந்த முறையில் வெளிப்படுத்த தனது அனைத்து திறமைகளையும் பயன்படுத்தியிருக்கிறார். பின்னணி இசை- காட்சிகளை உயிர்ப்பிக்கிறது. கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தெய்வீக உணர்வை அவர் ஸ்லோகங்களுடன் அமைத்திருக்கும் பாணி. அதே தருணத்தில் வில்லன் வரும் தருணங்களில் அவனது அழிவை பிரத்யேக ஒலியின் மூலமாக உணர்த்தியிருக்கும் பாணி. பாராட்டைப் பெறுகிறது.

வி எஃப் எக்ஸ் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதே தருணத்தில் அதிரடி சண்டை காட்சிகளும், மூச்சடைக்கக்கூடிய வகையில் இடம் பிடித்திருக்கின்றன. ஸ்ரீ நாகேந்திர தாங்கலாவின் தயாரிப்பு வடிவமைப்பு பாராட்டுக்குரியது. படத்தொகுப்பாளர் சாய்பாபு தலாரி இந்த ட்ரெய்லரை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்.‌ பிரைம்ஷோ என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ள இதன் தயாரிப்பின் தரம் சர்வதேச அளவில் இருக்கிறது.‌

'ஹனுமான்' படத்தின் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இதன் ட்ரெய்லர் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. அன்மைய காலங்களில் இதுவே மிகச்சிறந்த ட்ரெய்லர் எனும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தி தினத்தன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதால்.. இன்னும் ஒரு மாதத்திற்குள் பார்வையாளர்கள், ரசிகர்கள் ‌என அனைவரும் தெய்வீக பயணத்திற்கு தயாராகுங்கள்.‌

'ஹனுமான்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும், பான்- வேர்ல்ட் படமாக வெளியாகிறது.‌ இந்த திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ் அட்டகாசமான குரலில் 'பந்தா' பாடல்!!