நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து கவுண்டமணிக்கு நீதி கிடைத்துள்ளது.
1996-ம் ஆண்டு நளினி பாய் என்பவருக்குச் சொந்தமாக சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்த நிலத்தை கவுண்டமணி வாங்கி அதில் ஒரு வணிக வளாகத்தைக் கட்ட திட்டமிட்டார். அதற்காக ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்திடம் கட்டடம் கட்டும் பணியை ஒப்படைத்தார். இந்த பணிக்காக 3 கோடியே 58 லட்சம் ரூபாய் பணம் ஒப்பந்தமாகப் போடப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கான பணம் முழுவதையும் கட்டிய பின்னரும் கட்டுமான நிறுவனம் கட்டடத்தை கட்டும் பணியை தொடங்கவேயில்லை என கவுண்டமணி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் 46 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே கட்டட பணிகள் நிறைவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து இடத்தை கவுண்டமணியிடம் ஒப்படைக்க வேண்டும். 2008 ஆம் ஆண்டு முதல் மாதம் ஒன்றுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது . இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில் அந்த மேல் முறையீடு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றமும் மேல்முறையீட்டை ரத்து செய்துள்ளதால் கவுண்டமணிக்கு 26 ஆண்டுகள் கழித்து நீதி கிடைத்துள்ளது.