உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கு, சென்சார் போர்டு அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
கலைஞரின் பேரன் என்பதாலேயே, அதிமுக ஆட்சியில் அல்லல்பட்டார் உதயநிதி ஸ்டாலின். ‘அரசியல் வேண்டாம், சினிமாவே போதும்’ என்று இருந்தவரிடம் கூட அரசியல் செய்தது அதிமுக அரசு. உதயநிதி ஸ்டாலின் தயாரித்த, நடித்த ஒரு படத்துக்கு கூட ‘யு’ சான்றிதழ் கொடுக்காமல், தமிழக அரசின் கேளிக்கை வரிவிலக்கு கிடைக்க விடாமல் செய்தது. இத்தனைக்கும் அந்த கேளிக்கை வரிவிலக்கைக் கொண்டு வந்ததே கலைஞர்தான் என்பது வேறு விஷயம். பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ‘நீர்ப்பறவை’ படத்துக்கு கூட ‘யு’ சான்றிதழ் அளிக்காமல் அலைக்கழித்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள். தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால், கேளிக்கை வரிவிலக்கு கிடைக்காது. இருந்தாலும், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதற்குமுன்பு வெளியான ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்துக்கும் ‘யு’ சான்றிதழ் அளித்தது குறிப்பிடத்தக்கது.