Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைகளாலேயே வரையப்பட்டு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Advertiesment
கைகளாலேயே வரையப்பட்டு வெளியான ‘பன் பட்டர் ஜாம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

J.Durai

, புதன், 10 ஜூலை 2024 (14:48 IST)
ரெய்ன் ஆப் ஆரோஸ்  நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்‘பன் பட்டர் ஜாம்’. 
 
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
 
கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத்,
பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  
 
பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. 
 
சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும், சோசியல் மீடியாவிலும் வெளியிடுவதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்படத்தின்
30 அடி உயரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள உயர்ந்த சுவரில் மேலிருந்து கீழாக இறக்கி  மீடியா முன்பாக வெளியிட்டது புதுமையாக இருந்தது.
 
அனைவரின் கை தட்டல்கள் உடன் கதாநாயகன் ராஜீ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்பு தோன்றி பேசி நன்றி தெரிவித்தார்.  
 
இதை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வில்
இயக்குனர் ராகவ் மிர்தாத் பேசும்போது, 
 
“பொதுவாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நட்சத்திரங்கள் தான் வெளியிடுவார்கள். ஆனால் எனது முதல் படத்திற்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக அவர்கள் முன்னிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தேன். இப்படி ஒரு தயாரிப்பாளர் இருந்தால், நாம் நினைத்ததை நினைத்தபடி எடுக்கலாம் என்று சொல்லும் விதமாக சினிமாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர் என்பதால் படத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சரியாக செய்து கொடுத்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை எனக்கு அறிமுகப்படுத்தியதும் இதில் கதாநாயகனாக ராஜுவை உள்ளே கொண்டு வந்ததும் நண்பர் சதீஷ் தான். அவர் இந்த திரைப்படத்தின் வடிவமைப்பாளர்.
 
இந்த படத்தின் கதையை இரண்டு மணி நேரம் கேட்டதும் ராஜு உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தின் கருவை சொல்லும் விதமாக இதன் போஸ்டர் இருக்க வேண்டும் என நினைத்து கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுத்துக்கொண்டு கைகளாலேயே வரையப்பட்ட போஸ்டர் தான் இது. வாழ்க்கையில் நிறைய போராட்டம் நடக்கும். எல்லோருடைய மனதிலும் ஒரு போர்க்களம் இருக்கிறது. பல பிரச்சனைகளால் நாம் அன்றாட வாழ்க்கையை அனுபவிக்காமலேயே நாளை பார்த்துக் கொள்வோம் என கடந்து செல்வோம். ஆனால் திடீரென ஒருநாள், நாளை என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் அந்த கணத்தின் சந்தோஷத்தை அப்போதே அனுபவிக்க வேண்டும் என்பதைத்தான் இந்த போஸ்டர் மூலமாக சொல்ல நினைத்தேன்” என்றார்.
 
தயாரிப்பு வடிவமைப்பாளர் சதீஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் ஒரு வரி கதை தயாரிப்பாளர் சுரேஷுக்கு பிடித்து இருந்தது. அதை சொன்னதும் அதற்கேற்றபடி முழுக்கதையையும் இயக்குநர் ராகவ் தயார் செய்துகொண்டு  வந்தார். கதையை கேட்டதும் தயாரிப்பாளர் சுரேஷ் அனைத்தையும் எங்கள் பொறுப்பில் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தபோதுதான் ராஜு நினைவுக்கு வந்தார். ஏற்கனவே அவர் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கதாநாயகனாக அவருக்கு இதுதான் முதல் படம். இது பெரிய பட்ஜெட் படம் தான். நான் படம் பார்த்து விட்டேன். ராஜு சிறப்பாக நடித்துள்ளார். தனக்கு  இது சரியாக வருமா என என்னிடம் அவர் அவ்வப்போது சந்தேகம் கேட்பார். எல்லாம் சரியாக வரும் என அவரை சமாதானப்படுத்துவேன். கதாநாயகியும் புதுமுகமாக இருக்கவேண்டுமென கேரளாவில் இருந்து ஆத்யாவை வரவழைத்து ஆடிசன் செய்து ஓகே செய்தோம்” என்றார்.
 
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா பேசும்போது, “இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஒரு யூத்ஃபுல்லான படம் இது. அப்படி ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அந்த வகையில் இரண்டரை மணி நேரம் பார்க்கும் ஒரு ஃபீல்குட் படமாக இது இருக்கும். பாடல் கம்போசிங்கின் போது கூட ரொம்பவே சீரியஸாக இல்லாமல் ஜாலியும்  கலாட்டாவுமாக தான் பாடல்களை உருவாக்கியுள்ளோம். ராஜுவை பொறுத்தவரை அவருக்குள் ஒரு இயக்குநர் இருக்கிறார் என்பதால் அனைவரும் ரசிக்கும் விதமான நடிப்பை இதில் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாபு, பத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் ஆகியோருடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றியுள்ளேன்” என்று கூறினார். 
 
நாயகி ஆத்யா பிரசாத் பேசும்போது,
 “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ராகவ் சொன்னபோது நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையுடன் பொருந்தி போனது. அதனாலேயே இந்த படத்தில் நடிக்க விரும்பினேன். அதற்கு ஏற்ற மாதிரி ஆடிசனிலும் தேர்வானேன். ராஜுவுடன் இணைந்து நடித்தது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. படத்தில் அவர் கதாபாத்திரம் என்னவோ அதேபோலத்தான் எப்போதுமே வாழ்ந்து கொண்டே இருந்தார். அவரது நிஜ கேரக்டரே அதுதானா என்று கூட தோன்றியது” என்று கூறினார்.
 
நாயகன் ராஜு பேசும்போது,
 “நான் கதாநாயகனாக நடித்து முதல்முறையாக பங்கேற்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இது. இந்த இடத்தில் நான் இன்று நின்று பேசுவதற்கு காரணமான இந்த விஜய் டிவி, ஹாட்ஸ்டார், பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் அதில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்த ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி. இன்று நம் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தியேட்டருக்கு படம் பார்க்க செல்வதற்கே நம்மால் திட்டமிட்டபடி சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. அந்த வகையில் ஒரு திரைப்படம் தியேட்டருக்கு செல்வதற்கு எவ்வளவு தாமதமாகும் என்று யோசித்துப் பார்த்தால் எங்களது பட வேலைகள் கொஞ்சம் விரைவாகவே நடக்கிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது. வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்களிடமும் பொய் சொல்ல கூடாது என்று நினைக்கிறேன்.
 
வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் இந்தப்பகுதியில் இருந்த அட்ரஸ் கார்த்திக் என்பவர் மூலமாக பல கம்பெனிகளில் வாய்ப்பு தேடிய எனக்கு பிக்பாஸில் ஒரு வெற்றி வந்த பிறகு, கதை சொல்கிறேன் கேட்கிறீர்களா என வாய்ப்பு தேடி வந்தது. என்னை பொறுத்தவரை நான் ஒரு கதையை கேட்டு அதில் குறை நிறைகளை சொல்ல வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. என்னைத் தேடி வரும் ஒவ்வொரு வாய்ப்பும் எனக்கு தேவதை மாறித்தான். அதனால் எந்த தேவதை கை கொடுத்தாலும் அந்த தேவதையின் கையை இறுகப்பிடித்துக் கொண்டு மேலே வந்து விட வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது. பிக்பாஸ் முடிந்து சினிமாவுக்கான முயற்சி மேற்கொண்ட போது பலரும் பலவிதமாக நடிப்பு ஆலோசனைகள் கூறி அதிலேயே ஒரு வருடத்திற்கு மேல் போய்விட்டது. 
 
ஒரு கட்டத்தில் நானே எனக்காக படம் பண்ணலாம் என்று நினைத்து என்னுடைய கெட்டப்பை மாற்றி என் வீட்டிலேயே என்னை அடையாளம் புரியாத அளவுக்கு ஆளே மாறிப்போனேன். அதன் பிறகு நம்மிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், நம்மை எப்படி பார்க்க விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு நடித்த படம் தான் இந்த ‘பன் பட்டர் ஜாம்’. 
இந்த படம் தாய்க் குலங்களுக்கு ரொம்ப பிடித்த படமாக இருக்கும். புராண கதைகளில் எல்லாம் மனிதர்களின் தலை எழுத்தை நான்கு தலை கொண்ட பிரம்மன் எழுதுகிறார் என சொல்வார்கள். அதுபோல எனக்காக கதையை எழுதிய இயக்குனர், இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் என நான்கு தலைகள் தான் என்னுடைய தலையெழுத்தை தீர்மானிக்க போகிறீர்கள்” என்றார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரத்த தானம் செய்த ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டி, விருந்தளித்து மகிழ்ந்த நடிகர் கார்த்தி!