கமலஹாசனின் பிறந்தநாள் விழா திரைத்துறையினரால் பிரம்மாண்டமாக கொண்டாட இருக்கும் நிலையில் இந்த விழாவில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில வருடங்களாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பெருமளவு தவிர்த்து கொண்டே வருகிறார் நடிகர் அஜித். தான் நடிக்கும் திரைப்படங்களின் விழாக்களில் கூட அஜித் கலந்து கொள்வது இல்லையென்பதால் திரையுலகினரே சிலர் அஜித் மீது தனிப்பட்ட விதத்தில் வருத்தப்பட்டுள்ளனர். தற்போது கமலஹாசன் திரையுலகில் காலடி வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும், அவரது பிறந்தநாளையும் சேர்த்து பெரும் விழாவாக கொண்டாட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நாளை (நவம்பர் 7) பிறந்தநாள் கொண்டாடும் கமல் பரமக்குடியில் தனது தந்தையின் உருவ சிலையை திறந்து வைக்கிறார். மறுநாள் 8ம் தேதி மறைந்த இயக்குனர் பாலசந்தருக்கு அவரது நினைவாக ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் சிலை திறக்கப்பட உள்ளது.
கமல் 60 ஆண்டுகால திரையுலக பயணத்தை சிறப்பிக்கும் விதமாக நவம்பர் 17 அன்று திரையுலகினர் அனைவரும் பங்குபெறும் இளையராஜாவின் இசையுடன் கூடிய பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் இளையராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த விழாவுக்கு நடிகர் அஜித்துக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முக்கிய அடையாளமாக விளங்கும் கமல்ஹாசனுக்கு மரியாதை செய்ய அஜித் நேரில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒருவேளை அவர் தனியே கமலை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு நிகழ்ச்சிக்கு வராமல் இருந்துவிடவும் வாய்ப்பு உள்ளது என பேசிக் கொள்ளப்படுகிறது.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இந்த நிகழ்வில் நடிகர் அஜித் கலந்து கொள்வாரா என அவரது ரசிகர்களுமே ஆவலாக எதிர்பார்த்திருக்கின்றனர்.