தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் பிரதாப் போத்தன். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல ஹிட் படங்களை அளித்தவர் பிரதாப்.
இவர் இயக்கத்தில் வெளியான சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், வெற்றி விழா உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ட்ரெண்ட் செட்டிங் படங்களாக அமைந்தவை. பிரபல நடிகை ராதிகாவை இவர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்ட நிலையில் அமலா சத்யநாத் என்ற பெண்ணை மணந்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவாக இருந்து வந்த பிரதாப் போத்தன் (69) இன்று காலமானார்.
இந்த நிலையில் திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரதப் போத்தனின் மறைவுக்கு கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் ப்ரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி எனப் பதிவிட்டுள்ளார்.