இயக்குனர் ஷங்கர் தற்போது தன்னுடைய திரைவாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் உள்ளார். அடுத்தடுத்து அவர் இயக்கிய இந்தியன்2 மற்றும் கேம்சேஞ்சர் படங்கள் படுதோல்வி அடைந்துள்ளன. இதனால் அவரின் அடுத்த படத்தைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக திரைவட்டாரத்தினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இப்போது இன்னொரு சிக்கலாக அவரின் 11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன. அவர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு அமலாக்கத்துறையாலும் தனியாக விசாரிக்கப்பட்ட நிலையில் இப்போது ஷங்கரின் சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.
இது சம்மந்தமாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் ஆருர் தமிழ்நாடன் எழுதிய திக்திக் தீபிகா என்ற நாவலுக்கும் எந்திரன் படத்தின் கதைக்கும் ஒற்றுமை இருப்பதாகக் கண்டறிந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.