சுந்தர் சி. இயக்கவுள்ள சங்கமித்ரா படத்திற்கு பாலிவுட் கதாநாயகி திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள சரித்திரப் படம் ‘சங்கமித்ரா’. ஆர்யா, ஜெயம் ரவி நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. இதற்காக தனி பயிற்சியாளரை வைத்து வாள் சண்டையெல்லாம் கற்றுக் கொண்டார் ஸ்ருதி.
அந்நிலையில், திடீரென அப்படத்திலிருந்து தான் விலகிவிட்டதாக ஸ்ருதிஹாசன் அறிவித்தார்.ஆனால், அவர் விலகவில்லை. படத்தில் இருந்து அவரை நாங்கள் நீக்கிவிட்டோம் என ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் திடீரென அறிவித்தது.
எனவே, அவரது கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார் என்ற விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. அதில், ஹன்சிகா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. ஒரு கட்டத்தில் சங்கமித்ரா படம் டிராப் எனவும் செய்திகள் உலா வந்தது.
இந்நிலையில், அப்படத்தில் கதாநாயகியாக எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்த பாலிவுட் பட நாயகி திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கும் எனத் தெரிகிறது.