இயக்குனர் வசந்தபாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாக சிகிச்சை எடுத்து வருகிறார்.
கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த படியே சமூகவலைதளங்கள் மூலமாக தனது உடல்நிலையைப் பற்றி பதிவு செய்து வருகிறார் இயக்குனர் வசந்தபாலன். அவரின் சமீபத்தையை முகநூல் பதிவில் கடந்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு நோய் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மிக கடினமான காலகட்டம் மருத்துவர்களின் கணிப்பைத் தாண்டி என் நோய் தீவிரம் அடைந்தது. இடையறாது நாலா பக்கமும் கிடைத்த மருத்துவ ஆலோசனைகளால் நண்பர்களின் முயற்சியால் பெரும் மருத்துவர்களின் கண்காணிப்பால் செவிலியர்களின் கூர்மையான அக்கறையால் மருத்துவ உதவியாளர்களின் தன்னலமற்ற பணியால் பெருந்தொற்றை அங்குலம் அங்குலமாகக் கடந்தேன்.
இலக்கியமும் வாசிப்பும் மனச்சோர்வின்றி என்னை இலவம் பஞ்சைப் போல மிதக்க வைத்தது. இருபது நாட்கள் கடந்துவிட்டதால் கொரோனா தொற்றில்லாத மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன். அடுத்த வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும், என் குருநாதர்களும், சக இயக்குநர்களும், திரையுலக நண்பர்களும், முகமறியா முகப்புத்தக நண்பர்களும் இடையறாது என் மீது பொழிந்த பேரன்பில் மெல்ல மெல்ல வாதையின் பெருங்கொடுக்கிலிருந்து விடுபட்ட வண்ணம் இருக்கிறேன். அன்பு சூழ் உலகில் வாழ்வது வரம், மீண்டு(ம்) வாழ வருகிறேன் எனக் கூறியுள்ளார்.