‘குழந்தைகளை நடிக்க வைப்பது கஷ்டம்’ என இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
‘டிமாண்டி காலனி’ படத்துக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் கஷ்யப் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
இந்தப் படம் குறித்துப் பேசிய இயக்குநர், “படத்தை துவங்கும்போது கதை என்னை திருப்திப்படுத்தும் வரை ஒரு தேடல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. கதை முடிவான பிறகு கதை தனக்கு தேவையான நடிகர்களை தானே எடுத்துக் கொண்டது. நான் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே ஆர்டி ராஜசேகர் சாரின் ரசிகன். அவரின் கேரியரில் சிறந்த படமாக என் படம் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.
என் படங்களுக்கு தமிழ் தலைப்புகளை வைக்க வேண்டுமென்பது தான் என் விருப்பம். முதல் படத்தில் அதை செய்ய முடியவில்லை. இந்த படத்தில் உதவி இயக்குனர் சொன்ன ஒரு தலைப்பு பொருத்தமாக இருந்தது, அதையே வைத்து விட்டோம்.
குழந்தைகளை நடிக்க வைப்பது ரொம்ப கஷ்டம், அதனால் அந்த மாதிரி படங்கள் செய்து விடக்கூடாது என நினைத்தேன், ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு குழந்தை கதாபாத்திரம் அமைந்தது. அதில் மானசி சிறப்பாக நடித்து கொடுத்தார்” என்றார்.