விஜய் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜன நாயகன். இந்தப் படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இந்தப் படத்தை எச்.வினோத் இயக்க அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒரு பக்கம் இது விஜயின் கடைசி படம் என்பதாலும் அரசியலில் அவர் இறங்கி விட்டதால் படத்தில் அரசியல் சம்பந்தமாக யாரையும் தாக்கி பேசக் கூடிய வசனங்கள் இருக்குமா? என்பதாலும் அனைவரும் படத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
சும்மாவே விஜயின் படங்களில் அரசியல் ரீதியாக ஏதாவது ஒரு வசனம் இருக்கும். அதிலும் இவர் இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால் படத்திலும் கண்டிப்பாக தரமான சம்பவங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. விஜயின் குரலில் வெளியான தளபதி கச்சேரி பாடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27 ஆம் தேதி மலேசியாவில் நடக்க உள்ளது. மிகப்பிரம்மாண்டமாக இந்த விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். விஜய் கலந்து கொள்ளும் கடைசி இசை வெளியீட்டு விழா இந்த முறை விழாவை மிகவும் ஸ்பெஷலாக்க இருக்கிறார்கள். ஒரு சின்ன கான்சர்ட் மாதிரியும் இதை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக விஜய் நடித்த படங்களில் இருந்து குறிப்பிட்ட படங்களின் பாடல்களை மட்டும் தேர்வு செய்து அந்த விழாவில் கச்சேரியாக நடத்த இருக்கிறார்கள். மேலும் இந்த விழாவில் பெரிய பெரிய நடிகர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்குத்தான் ரஜினியும் கமலும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொள்ள போகிறார் என்ற ஒரு தகவல் சோசியல் மீடியாக்களில் அடிப்பட்டு வருகிறது,இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இந்த மாதிரியான ஒரு பேச்சுதான் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே தனுஷும் விஜய் மாதிரியே சமீபகாலமாக மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குதல், நோட்டு புத்தகங்கள் வழங்குதல், ரசிகர்களை சந்தித்தல் போன்றவைகளை செய்து வருகிறார். இருவரும் ஒன்று சேர்ந்தால் மாஸா இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.