ஏ.ஆர்.முருகதாஸ் அலுவலகம் சென்ற தர்பார் பட விநியோகஸ்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நஷ்டம் ஏற்பட்டதாக ‘தர்பார்’ திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர் அவர்கள் கடந்த சில நாட்களாக ரஜினிகாந்தை சந்திக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் நஷ்டம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் மிகப்பெரிய லாபத்தை அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் கொடுத்திருப்பதாகவும் ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தர்பார் படத்தை வாங்கிய உண்மையான விநியோகஸ்தர்கள் யாரும் இதுவரை இந்த படத்தின் வசூல் குறித்து வாய்திறக்கவில்லை என்றும், ரஜினி வீட்டு முன் கூடி இருப்பது விநியோகஸ்தர்களா? அல்லது அவர்களைச் சார்ந்தவர்களா? என்பது தெரியவில்லை என்றும் ரஜினி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை இன்று சந்திக்க முற்பட்டனர். ஆனால், அவரது அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினர் விநியோகஸ்தர்களை வெளியேற்றியுள்ளனர்.