ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் தர்பார் திரைப்படத்தை தடை செய்ய கோரிய வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த பட விநியோக நிறுவனம் ஒன்று லைகா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
இதற்கு முன் லைகா நிறுவனம் வெளியிட்ட 2.0 திரைப்படத்தை வாங்கிய அந்நிறுவனம் லைகாவுக்கு வட்டியின் அடிப்படையில் கடன் கொடுத்ததாகவும், அதை லைகா நிறுவனம் திரும்ப செலுத்தாமல் இருப்பதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது நாளை பதில்மனு தாக்கல் செய்வதாக லைகா சார்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. அவகாசம் அளித்துள்ள நீதிபதிகள் நாளைக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். இதனால் சொன்ன நாளில் தர்பார் வெளியாகுமா என்ற பதட்டம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.