நெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2, இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா. இவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார்.
'விழுத்திரு
தனித்திரு
வரும் நலனுக்காக
நீ தனித்திரு'
என்ற இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் பாடலை இன்ஜாமம் எழுதியுள்ளார். பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், சத்யன் மகாலிங்கம், அபி (கனடா), சுதர்சனன் அசோக்(அமெரிக்கா), கணேசன் மனோகரன், இன்ஜாமம் ஆகியோருடன் இசை அமைப்பாளர் சி.சத்யாவும் இணைந்து பாடியுள்ளார்.
பாடல் உருவாக்கம் பற்றி சி.சத்யா கூறியதாவது, "முன்பு அறிவியல் வளர்ச்சி குறைவு அதனால் இசைக் கலைனஞர்கள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இணைந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்போது அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது. தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இசையமைப்பாளராக என்னுடைய பங்களிப்பை வழங்க முடிவு செய்தேன்.
இதில் பாடியவர்கள், பாடல் எழுதியவர் அனைவரும் ஆன்-லைன் மூலம் பாடியும், எழுதியும் கொடுத்தார்கள்.
தொடர்ந்து சில ஆல்பங்களை வெளியிடவுள்ளேன்" என்றார். இவர் தற்போது எழில் இயக்கியுள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்', சுந்தர்.சி இயக்கும் 'அரண்மனை -3', 'ராங்கி' உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.