பிரபல நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது. இதில் நெடும்பள்ளி டேம் என்ற பெயரில் முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் இதுகுறித்து கருத்து தெரிவித்தார். அந்த படத்தில் மஞ்சுவாரியர் உரையாற்றும் ஒரு காட்சியில், "நாம் பிறப்பதற்கு முன்பே, ஒரு ராஜா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு அஞ்சியதால், 999 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து, நெடும்பள்ளி அணை கட்டப்பட்டது. ராஜாக்களும் ஆக்கிரமிப்பு சக்திகளும் நாட்டை விட்டு சென்ற பின்பும், இன்றும் ஜனநாயகத்தின் பெயரில் நம்மை அடக்கி ஆளுகிறார்கள். இந்த அணையின் அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது.
இது பெரியாறு அணையை குறிக்கும்படியான சூழ்நிலை என்பதால், இந்த தர்க்கமான அரசியல், அணையை பலிகடாக மாற்றும் வகையில் உள்ளது என்று அவர் கண்டனம் தெரிவித்தார். "அணையை காப்பாற்ற தற்காலிகச் சுவர்களால் பயன் இல்லை. அணையே இல்லாமல் இருப்பதே சிறந்த தீர்வு" என்கிற வசனமும் அதில் இடம் பெற்றுள்ளது.
மேலும், "அணையின் இரண்டு ஷட்டர்கள் திறந்தாலே அழிவை ஏற்படுத்தும்; அதை குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் தண்ணீரில் மூழ்கும்" போன்ற வசனங்களும் படத்தில் இடம் பெற்றுள்ளன. இதுபோன்ற விவகாரங்களால் இரு மாநிலங்களின் உறவுகளில் பிரச்சனை உருவாகும் என்பதால், இக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.