தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் படம் பார்க்க வருபவர்கள் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த போது நிலையில் மக்கள் கொரோனா தாக்கம் உள்ள பகுதிகள் எவையெவை என கண்டறிவதற்காகவும், அவற்றை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் “ஆரோக்ய சேது” என்ற மொபைல் செயலியை மத்திய அரசு ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பிரதமர் மோடியே தன் பேச்சின் போது அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால் இந்த செயலி பாதுகாப்பு குறைவானது என்றும், எளிதில் ஹேக் செய்யக்கூடிய தனிநபர் விபரங்களை கண்காணிக்கும் செயலி என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து மத்திய தகவல் மையம் இந்த செயலியை யார் எப்போது உருவாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பியது.
இதையடுத்து இந்த செயலியை யார் உருவாக்கியது என்று தமக்கு தெரியாது என மத்திய மின்னணு அமைச்சகம் அதிரடியாக பதிலளித்துள்ளது. இதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய பதில் அளிக்காத சிபிஐஓக்கள், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய தகவல் ஆணையம்.
இந்நிலையில் இந்த செயலியைதான் இப்போது திரையரங்குக்கு வரும் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.