தமிழ் திரையுலகினர் ஜிஎஸ்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதன் காரணமாக 4 நாட்களாக இன்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தியேட்டர்களுக்கு 28 சதவீத வரியும், தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியும் சேர்த்து தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன், ரஜினி, டி.ராஜேந்திரன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில் சினிமா வெறும் வியாபாரம் என்றால் ஏன் வரிகளுக்கு எதிராக வாதிட வேண்டும். மேலும் அதிகமாக பணம் சம்பாதித்து, அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுத்துவிட்டு, வரி விலக்கு வேறு கேட்ட வேண்டுமா? கோடிகளில் வசூல் என விளம்பரம் செய்துவிட்டு, சினிமா நட்சத்திரங்களின் சம்பளத்தையும் ஏற்றிவிட்டு இப்போது அழுவது ஏன்? சினிமாவை காப்பாற்றவா? என கேள்வி கேட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்து கூறுகையில், சினிமாவை கலையாய் மதித்து படம் எடுப்பவர்களுக்கு மட்டும் வரி விலக்கு கொடுங்கள். வியாபார படங்களுக்கு வரி விலக்கு வேண்டாம் என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த கருத்தால் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.