நடிகை பாவனா கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு வந்தபோது அவரை 3 பேர் காரில் கடத்தி 2 மணிநேரமாக மானபங்கப்படுத்தினர். பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி அதனை வீடியோவாகவும் எடுத்தனர் என்ற செய்தி திரையுலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியான பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனி என்பதும் அதில் பல சினிமா பிரபலங்களும் அவருடன் தொலைப்பேசி தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசாரின் தொடர்ந்த தேடுதல் வேட்டையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேர் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கேரள போலீசார் இருவரையும் கைது செய்தனர். வாக்குமூலத்தில் நடிகை பாவனாவை கடத்தினால் தங்களுக்கு ரூ.30 லட்சம் பணம் தருவதாக பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் சுனில் தெரிவித்ததாகவும் தெரிவித்தனர்.
நடிகை பாவனாவை கடத்தியது ஒரு பிரபல நடிகரும், இரு அரசியல் தலைவர்களின் வாரிசுகள் என்றெல்லாம் தகவல்கள் கசிந்ததால் அந்த விஐபிகள் யாராக இருக்கும் எனக் கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் பாவனா கடத்தலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மலையாள முன்னணி நடிகர் திலீப் கூறியுள்ளார். இந்த சம்பவம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பாவனா கடத்தலைக் கண்டித்து நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் திலீப் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.