யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் படத்தின் மீதான தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது.
சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை நீதிமன்றத்தில் அபிராமி மெஹா மால் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் கிளாப் என்ற நிறுவனத்திடம் மாமனிதன் விநியோக உரிமையை பெற்றிருப்பதால் அந்த படத்தை தங்களுக்குக் கொடுக்காமல் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது. இதையடுத்து நீதிமன்றமும் இடைக்கால தடை விதித்தது.
ஆனால் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் யுவன் ஷங்கர் ராஜா சார்பாக படத்தின் விநியோக உரிமை சம்மந்தமாக அபிராமி மெஹா மால் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என ஆதாரப்பூர்வமாக நிரூபித்ததை அடுத்து இடைக்காலத் தடை நீக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.