பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட தியேட்டர் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டு ஒரே நாளில் இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அல்லு அர்ஜுனின் கைது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
அல்லு அர்ஜுன் கைதால் புஷ்பா 2 வசூல் 70 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் வெளியாகி 15 நாட்களில் உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் வசூல் 1052 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பாகுபலி 2வின் சாதனையை முறியடித்துள்ளது புஷ்பா 2.