அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆன தினத்தில் நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியான நிலையில், அல்லு அர்ஜுன் உள்பட ஒரு சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. அன்றைய தினம் 35 வயதான பெண் ஒருவர் முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்றபோது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் வந்ததாகவும், அவரை காண ரசிகர்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்துள்ளார். தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.