தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.
இதன் காரணமாக அவரின் சினிமா கேரியர் பாதிக்கப்படுமோ என அச்சப்பட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் “நான் முன்பெல்லாம் ரேஸ் மற்றும் சினிமா என இரண்டையும் ஒன்றாக செய்தேன். அதனால் ரேஸ் முடிந்ததும் படப்பிடிப்புக்காக ஓடவேண்டிய அவசரம் இருக்கும். அதனால் சில இடையூறுகள் எழுந்தன.அதனால் இப்போது ரேஸின் போது சினிமாவில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன்.
நவம்பர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன். மீதமுள்ள மாதங்களில் ரேஸில் கவனம் செலுத்துவேன். என்னிடம் இருந்து ஆண்டுக்கு ஒரு படம் வரும்” எனக் கூறியுள்ளார்.
அதே போல தான் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியது பற்றியும் பேசியுள்ளார். அதில் “ரேஸுக்காக என்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்பதால் நான் கடந்த 8 மாதங்களில் 42 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளேன். இதற்காக முழுமையாக சைவ உணவுப் பழக்கம், சைக்கிளிங் மற்றும் நீச்சல் பயிற்சி என செய்தேன். அதுமட்டுமில்லாமல் டி டோட்லராக மாறியுள்ளேன்.” என்க கூறியுள்ளார்.