நடிகர் அஜித்குமார் சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார். இந்த அணியின் மற்ற உறுப்பினர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. நேற்று இந்த போட்டி தொடங்கிய நிலையில் கடைசி நேரத்தில் அஜித் விலகிக்கொள்ள அவரது அணியினர் மற்றவர்கள் கலந்துகொள்கின்றனர்.
அஜித் போட்டியில் இருந்து விலகியதற்கு பயிற்சியின் போது அவருக்கு நடந்த விபத்துதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று போட்டி நடைபெறும் மைதானத்தில் ஏராளமான அஜித் ரசிகர்கள் குவிந்து அவரது பெயரை உரக்கக் கத்தி அவரது அணியினருக்கு உற்சாகமளித்து வருகின்றனர்.
இதையடுத்து நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இவ்வளவு ரசிகர்கள் வந்திருப்பது எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. நான் எப்போதுமே என் ரசிகர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான். குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றாக படியுங்கள். வேலை செய்பவராக இருந்தால் அது கடின உழைப்பைப் போட்டு முன்னேறுங்கள்.” என பேசியுள்ளார்.