திரைப்படங்களின் ஓ.டி.டி விற்பனையில் கடந்த சில மாதங்களாகவே நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனாவிற்கு பிறகு இந்திய சினிமாவில் ஓ.டி.டி உரிமம் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அந்த சமயத்தில் அதிக விலைக்கு ஓ.டி.டி நிறுவனங்கள் திரைப்படங்களை வாங்குவதற்கு ஆர்வமாக இருந்தன.
இது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் ஓ.டி.டி நிறுவனங்கள் திரைப்படங்களை வாங்குவதில் நிறைய கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளன. இதனால் லால் சலாம் மாதிரியான பெரிய திரைப்படங்கள் கூட ஒ.டி.டியில் வெளியாவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
தற்சமயம் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் துவங்கியது. ஏற்கனவே மார்க் ஆண்டனி என்கிற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்தில் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார்.
படப்பிடிப்பு துவங்கிய உடனே இந்த படத்தின் ஓ.டி.டி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த படம் 95 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை ஓ.டி.டியில் விற்பனையான அஜித் திரைப்படங்களிலேயே இதுதான் அதிக விலை என கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த வருடத்திற்கான திரைப்படங்களை நெட்ப்ளிக்ஸ் வருட துவக்கத்திலேயே வாங்கிவிட்டது. எனவே இனி புது திரைப்படங்களை அந்த நிறுவனம் வாங்காது என ஒரு பக்கம் பேச்சு இருந்தது. ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம்தான் வெளியாகிறது. எனவே அடுத்த வருட பட்ஜெட்டில் நெட்ஃப்ளிக்ஸ் இந்த படத்தை வாங்கியுள்ளது எனக் கூறப்படுகிறது.