இந்தியாவின் ரசிகர்களின் முடிசூடா மன்னன் அமிதாப் பச்சனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி வாங்காமல், வக்கீல் உடை அணிந்து, விளம்பரத்தில் நடித்தற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் மிக முக்கிய பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன், வெள்ளித்திரை மற்றும் விளம்பரங்கள் என 76 வயதிலும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எவரெஸ்ட் மசாலா நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் வழக்கறிஞர் போல் உடையணிந்து நடித்துள்ளார்.
வழக்கறிஞர் உடையை அணிந்து கொண்டு நடிக்கும் போது அதற்குரிய முன்னெச்சரிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறிய பார் கவுன்சில், இந்த விளம்பரத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த விளம்பரத்தில் அமிதாப் பச்சன், வழக்கறிஞர் உடையில் அறை ஒன்றில் அமர்ந்திருப்பார், அப்போது இருவர் அவர் அறைக்குள் நுழைந்து பாவ் பாஜியை அமிதாபுக்கு அளிப்பார், அதனை அவர் ருசித்து விட்டு தன் பிராண்டின் சுவையே பாவ்பாஜி சுவை என்று கூறுவார், இதில் வழக்கறிஞர் உடை அணிந்ததற்கு அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் கூட அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகள் ஸ்வேதா பச்சன் ஆகியோர் நடித்த நகைக்கடை விளம்பரம் ஒன்றில் வங்கி ஊழியர்களை தவறாகச் சித்தரித்ததாக போராட்டங்கள் எழுந்தது எனபது குறிப்பிடத்தக்கது.