கேரளாவில் கடந்த ஆண்டு பிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைதானார்கள். மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர். சில மாதங்கள் சிறையில் இருந்த திலீப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் நடிகை கடத்தல் வழக்கில் போலீசார் போலியான ஆதாரங்களை திரட்டி தன்னை சிக்க வைத்து இருப்பதாகவும், எனவே வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் மனுதாக்கல் செய்தார். நீதிபதி சுனில் தாமஸ் தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்து விசாரித்து திலீப் மனுவை தள்ளுபடி செய்தது.
“போலீஸ் விசாரணை சரியான திசையில் செல்கிறது. விசாரணை திருப்தி அளிப்பதாகவும் உள்ளது. எனவே வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தேவை இல்லை” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.