பாலிவுட் நடிகை கஜோல் ஒரு உணவகத்திற்கு சென்று ஒரு சூப் சாப்பிட்டு சென்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை என்றாலும் தமிழில் மின்சார கனவு படத்தில் கஜோல் நடித்திருந்தார். தற்போது தனுஷுடன் விஐபி-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் அவரது நண்பர் ரயான் நடத்தி வரும் ஒரு உணவகத்திற்கு சென்று மாட்டு இறைச்சியில் செய்த சூப் சாப்பிட்டார். அதோடு, அதை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ வைரலானது.
மாட்டிறைச்சிக்கு எதிராக பல அதிரி புதிரிகளை பாஜக நிகழ்த்தி வரும் இந்த சூழ்நிலையில், நடிகை கஜோல் மாட்டிறைச்சி சூப் பற்றி வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பாஜக பிரமுகர்கள் கஜோலை திட்டித் தீர்த்தனர்.
எனவே, இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள கஜோல் “இந்த வீடியோவில் இருப்பது பசு மாட்டு இறைச்சி இல்லை. அது எருமை மாட்டு இறைச்சி. இது சட்டப்பூர்வமாக கிடைக்கிறது. இது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இது மத உணர்வுகளை புண்படுத்தும் வாய்ப்புகள் என்பதால், இந்த விளக்கத்தை கொடுக்க நான் முன் வந்தேன். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல” என விளக்கம் அளித்துள்ளார்.