Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பினால்.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..!

Advertiesment

Siva

, புதன், 2 ஜூலை 2025 (17:58 IST)
நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டவர்களுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
 
இதுகுறித்து  தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில், எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதுமின்றியும் பல தவறான பொய்யான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்னும் நபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் வழக்கு (எண்: Crl.O.P.Nos.2978 & 3184 of 2025) தொடுக்கப்பட்டது.
 
வழக்கின் கடுமையை உணர்ந்து இனி அவ்விதம் அவதூறாக பதிவிட மாட்டேன் என்று குற்றம்சாட்டப்பட்டவர் உறுதிமொழி தந்து நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம், அந்த உறுதி மொழியில் இருந்து அவர் சற்றும் தவறக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் அடிப்படையில், அந்த நபருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
 
இதைத் தொடர்ந்து சற்று காலம் அவதூறுகள் ஏதும் வெளிவராத நிலையில், சமீப காலமாக மீண்டும் பயில்வான் ரங்கநாதன் என்னும் நபர் உட்பட பலர், எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் வாரி இறைத்து வருகின்றனர். அவ்விதம் அவதூறு பரப்புபவர்கள் மேற்காணும் வழக்கை மனதில் கொண்டு உடனடியாக அவர்களது இந்த சட்ட விரோத செயலை நிறுத்த வேண்டும்.
 
அவ்விதம் நிறுத்தத் தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பும் அனைவர் மீதும் கடந்த முறையை விட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலமாக தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது. இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடரபான ஆபாசமான அவதூறான கருத்துகளை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதம் இன்றி சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!