சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களது மறுசீரமைப்புக்காக கோலிவுட் திரையுலகினர் தங்களால் முடிந்த நிதியளித்து உதவினர்.
திரையுலகினர் அனைவரும் கேரள முதல்வரிடம் வெள்ள நிவாரண நிதியாக கொடுத்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய் மட்டும் வித்தியாசமாக கேரளாவில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கி கணக்கிற்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.70 லட்சம் அனுப்பி அந்த பணம் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்தார்.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், தனது மெலிண்டா-பில்கேட்ஸ் அறக்கட்டளை மூலம் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ. 4 கோடி கொடுத்துள்ளார். இந்த பணத்தை அவர் விஜய் பாணியில் கேரள அரசிடம் கொடுக்காமல், கேரளாவில் மீட்புப்பணிகளை செய்து வரும் யூனிசெப் அமைப்பிற்கு வழங்கி, கேரள மக்களுக்கு இந்த பணத்தின் மூலம் உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அமைப்பு கேரளாவில் ஏற்கனவே வெள்ள சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ள பாதிப்பில் இருந்து கேரள மக்கள் மீண்டு வர வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.