தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் சாம்ஸ், இனி தனது பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2008-ல் வெளியான 'அறை எண் 305-ல் கடவுள்' திரைப்படத்தில், சாம்ஸ் ஜாவா படித்து மென்பொருள் வல்லுநராக மாறும் இளைஞராக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஜாவா சுந்தரேசன்.
அந்த பாத்திரம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றாலும், சமூக வலைதளங்களில் மீம்ஸ்களால் ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் மிகவும் பிரபலமடைந்தது. இந்த கதாபாத்திரத்திற்கெனத் தனி ரசிகர் கூட்டமும் உருவானது.
இந்த நிலையில், நடிகர் சாம்ஸ், இயக்குநர் சிம்புதேவனை நேரில் சந்தித்து, தனது பெயரை அதிகாரப்பூர்வமாக ஜாவா சுந்தரேசன் என்று மாற்றிக்கொள்ள அனுமதி கேட்ட காணொலி வெளியாகி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கலையுலகில் இருக்கும் சாம்ஸ், தனக்கு பெரும் அடையாளத்தை கொடுத்த இந்த கதாபாத்திரத்தின் பெயரையே தனக்கு சூட்டிக்கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.